Thursday, December 17, 2009

ஆப்பிரிக்காவில் பிரின்ஸ்


கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள லம்பாஸியில் உள்நாட்டு கலவரங்கள் வெடிக்க, அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வடங்கோக்கள் என்னும் புரட்சியாளர்களால் நகரமே நாசமாகிறது.

புரட்சி கும்பலின் கண்ணில் தென்படும் நபர்களை எல்லாம் கொலைவெறியுடன் கொன்று குவிக்கின்றனர். கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் ராணுவமும் திணறிக் கொண்டிருக்கும் அவல நிலை.


இதற்கிடையே புரட்சியாளர்களிடமிருந்து துணிச்சலாக தப்பிக்க முயல்கின்றனர் ரயான் குடும்பத்தினர். சண்டையிட்டுக் கொண்டே லம்பாஸி நகரை விட்டு சிறிய விமானத்தில் இரு குழந்தைகளுடன் தப்பித்து செல்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக எதிரிகளின் கண்ணில் விமானம் தென்பட அதை சுட்டு சேதப்படுத்துகின்றார்கள்.

பழுதடைந்த விமானத்தோடு அடர்ந்த முட்காட்டின் நடுவில் சிக்கிக் கொள்கின்றனர். தங்களை சுற்றிலும் விஷ முட்கள் சூழ்ந்திருப்பதை கண்டு மரணத்தின் விளிம்பில் உதவிக்காக காத்துக் கிடக்கின்றனர்.

ரயான் குடும்பத்தினரை மீட்பதற்காக யாருமே செல்ல தயங்கும் ஆபத்துகள் நிறைந்த கானகத்திற்கு மனித நேயம் மிக்க தீரர்களான பிரின்ஸ் மற்றும் பார்னே துணிச்சலாக செல்லத் துணிகிறார்கள்.

இறுதியில் கானகத்தில் பல போராட்டங்களை கடந்து கொலை வெறி கொண்ட வடங்கோக்களை சமாளித்து ரயான் குடும்பத்தினரை பத்திரமாக மீட்டு வருவதே கதை.







Monday, November 9, 2009

தலை வாங்கிய குரங்கு - டெக்ஸ் வில்லர் சாகஸம்








துப்பாக்கி வீரரான டெக்ஸ் வில்லர், ரேஞ்சர் உளவுப் பிரிவில் தலை சிறந்த ஏஜெண்டாக திகழ்பவர் . செவ்விந்திய இனத்தில் நவஜோ என்ற இனத்தின் தலைவர். வெள்ளையரான இவர் லிலித் என்ற செவ்விந்திய பெண்ணை மணந்து, சிலரின் சூழ்ச்சி காரணமாக மனைவியை பறிகொடுத்தவர். செவ்விந்திய இனத்தையும், அடிமைகளாக அழைத்து வரப்பட்ட ஆப்பிரிக்கர்களையும் வெள்ளையர் வெறுத்தனர். டெக்ஸ் வில்லர் இவ்விரு இனங்களுக்காக தொடர்ந்து போராடுபவர். நவஜோ இனத்தவர் இவரை இரவுக் கழுகு என்று அழைப்பார்கள்


டெக்ஸ் வில்லரின் உற்ற தோழனும், சக ரேஞ்சருமான கிட் கார்ஸன் நகைச்சுவை உணர்வு கொண்டவர். டெக்ஸ் வில்லருடன் பல சாகஸங்களில் பங்கேற்று உயிர் காப்பான் தோழன் என்பதகேற்ப திகழ்பவர்.


டெக்ஸ் வில்லரின் வாரிசான சின்னக் கழுகு கிட் தந்தையை போலவே சாகஸ வீரர். டைகர் ஜாக் ஆபத்தான தருணங்களில் டெக்ஸ்-க்கு உதவும் செவ்விந்திய வீரர். தன்னுடைய பலங்களாக டெக்ஸ் கருதுவது இவர்கள் மற்றும் தன்னுடைய குதிரை டைனமைட் மற்றும் வின்சென்ஸ்டர். இவரின் சாகஸங்கள் இத்தாலி.ப்ரென்ஞ், ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் தமிழில் வெளிவந்துள்ளன.

மால்பைஸ் என்ற கணவாய் பகுதியில் இரவு நேரங்களில் தனியே செல்லும் வழிப்போக்கர்கள் வினோதமான முரசொலி சத்தத்தை தொடர்ந்து மர்மமான முறையில் தலை வெட்டி படுகொலை செய்யப்படுகிறார்கள். இரவு நேரங்களில் அப்பகுதியில் மக்கள் வெளியே செல்ல அச்சப்பட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றார்கள்.



தற்செயலாக இப்பகுதியை கடக்கும் ரேஞ்சரான டெக்ஸ் வில்லர் ஆபத்து நிறைந்த கணவாய் பகுதிக்கு துணிச்சலாக சென்று தொடர் கொலைகளுக்கான காரணத்தையும் மர்ம கொலைகாரன் யார் என்பதையும் துப்பறிகிறார்.




குரங்கு வேடமணிந்த ஒரு வேடதாரியின் இரத்த வெறியினால் நிகழும் படுகொலைகள் என்பதை கண்டறிந்து இதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் மர்ம கொலைகாரனை அழித்து தொடர் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றார்.

சஸ்பென்ஸ் நிறைந்த இச்சித்திர தொடர் தலைவாங்கிய குரங்கு என்ற பெயரில் லயன் காமிக்ஸில் முதன் முதலாக டெக்ஸ் வில்லர் சாகஸமாக வெளிவந்தது.

Wednesday, October 14, 2009

அசோக்/மேத்தா காமிக்ஸ் வரிசைப்பட்டியல்

லயன் காமிக்ஸ் மற்றும் இராணி காமிக்ஸ் தொடங்கிய 1984-ம் ஆண்டில்தான் மேத்தா காமிக்ஸ்-ம் தொடங்கப்பட்டது. சிறிது காலத்திற்கு பிறகு அசோக் காமிக்ஸ் என்ற பெயர் மாற்றத்துடன் தொடர்ந்து வந்தது. தரமான காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட்ட நிறுவனங்களில் மேத்தா காமிக்ஸ் நிறுவனமும் ஒன்று.
இவர்கடைய நிறுவனத்தில் ஜான் சில்வர் கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்துள்ளனர். அச்சித்திர புத்தங்களில் வெளிவந்த இரத்தப் பிசாசு என்ற சித்திரத் தொடருக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. எதன் காரணத்தினாலோ மேத்தா காமிக்ஸ் வெளிவராமலே நின்றுவிட்டது.



அவர்கள் வெளியிட்டுள்ள புத்தகங்களின் பட்டியலை இங்கே தொகுத்துள்ளேன்.

1. இரத்த விளையாட்டு (ஜான் சில்வர்)

2. கொலைக் கழகம் (ஜான் சில்வர்)

3. மரணக்கயிறு (ஜான் சில்வர்)

4. மனித வேட்டை (ஜான் சில்வர்)

5. பயங்கரத் தீவு (ஜான் சில்வர்)

6. விசித்திர பந்தயம் (ஜான் சில்வர்)

7. மரணத்தின் நிழலில் (ஜான் சில்வர்)

8. நவீனக் கொள்ளையர் (ஜான் சில்வர்)

9. புதிர்மாளிகை (லில்லி குழுவினர்)

10, பொற்சிலை மர்மம் (ஜான் சில்வர்)

11. நள்ளிரவு பிசாசு (லில்லி குழுவினர்)

12. சுரங்க வெடி மர்மம் (ஜான் சில்வர்)

13. இரும்புக் கை (ஜான் சில்வர்)

14. மரணக்களம் (ஜான் சில்வர்)

15. நல்லவனுக்கு நல்லவன் (ஜான் சில்வர்)

16. கல் நெஞ்சன் (ஜான் சில்வர்)

17 மர்ம பங்களா (அங்கிள் டெர்ரி)

18 ஆழ்கடல் திருடன் (ஜான் சில்வர்)

19. வைரக் கொள்ளை (ஜான் சில்வர்)

20 இரத்த பூதம் (அங்கிள் டெர்ரி)

21. மர்மத் தீவு (ஜான் சில்வர்)

22. மரண வைரம் (ஜான் சில்வர்)

23. பழி தீர்க்கும் உளவாளி (ஜான் சில்வர்)

24 போலி சுல்த்தான் (ஜான் சில்வர்)

25 மைக்ரோ ப்லிம் மர்மம் (ஜான் சில்வர்)

26 ரகசிய பைல் எக்ஸ் (ஜான் சில்வர்)

27 கடத்தல் மர்மம் (ஜான் சில்வர்)

28 இரத்த கறைகள் (ஜான் சில்வர்)

29 இரகசிய எதிரி (ஜெய்சன் ஒயில்ட்)

30 முகமூடி முரடன் (ஜெய்சன் ஒயில்ட்)

பின்குறிப்பு அசோக்/மேத்தா காமிக்ஸ் நிறுவனத்தார் வெளியிட்டுள்ள சித்திரக் கதை புத்தகங்களில் சில கதைகள் மறுபதிப்பாகவும் வெளியிட்டுள்ளனர். அதனை மேற்க்கண்ட வரிசைப் பட்டியலில் சேர்க்கவில்லை.

Tuesday, October 13, 2009

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Monday, September 21, 2009

முகமற்ற கண்கள்


வில்லியம் வான்ஸின் சித்திரங்களில் க்ரெக் (லுயி அல்பர் என்ற புனைப்பெயரில்)அவரின் கதையுடன் 1970-களில் வெளிவந்த ஒரு சித்திரத் தொடர் முதலைப்படை.

தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்க அரசாங்கத்தின் கீழ் செயல்படும் ஒரு இரகசிய பிரிவின் அதிரடி படை: முதலைப் படை. இந்த படையின் தலைவர் கலோனல் எல் (காமெடி கர்னல் இல்லீங்க!). கமாண்டர் ப்ரூனோ ப்ரேசில்.

படையின் உறுப்பினர்கள் பற்றி சிறிய அறிமுகம்.

ப்ரூனோ ப்ரேசில் கமாண்டர். மின்னல் வேக செயல்திறன் கொண்டவர் (என்னை போலவே)

கௌச்சோ மோரல்ஸ் முன்னாள் ரௌடி. சிறைச்சாலையின் வெளிப்புறம் மட்டுமின்றி உள்புறமும் நல்ல பழக்கம் அண்ணாச்சிக்கு.

விப் ரபேல் (அல்லது) ஜுடி சாட்டையடி வீராங்கனை. சர்க்கஸில் காட்டு மிருகங்களை சாட்டையை வைத்து பயமுறுத்திக் கொண்டிருந்தவர் இப்போது நாட்டு மிருகங்களை பயமுறுத்திக் கொண்டிருப்பவர்.

டெக்ஸாஸ் அண்ணாச்சி ஒரு கௌபாய். டமால் டூமில் பேர்வழி.

பில்லி ப்ரேசில் இவரும் அதிரடி படை காரர். கமாண்டர் ப்ரூனோவின் தம்பி.

நாடோடி ஆள் பார்க்க ஜிப்சி அடிச்சா எதிரிகள் கப்சிப்.

இந்த சித்திர தொடர்கள் வரிசையில் மூன்றாவதாக வெளிவந்த கதையே முகமற்ற கண்கள். திகில் காமிக்ஸில் பாக்கெட் சைஸில் வெளிவந்த புத்தகம். கதைக்கு வருவோம்.


முதலைப்படையின் பரம எதிரிகளில் ஒருவரான மேடம் சொர்ணா அக்கா (ச்சும்மா தமாசுக்கு) முதலைப் படை உறுப்பினர்களில் ஒருவரான விப் ரபேலை கடத்தி ஹிப்னாட்டிஸம் மூலம் அவளை ப்ரூனோ ப்ரேசிலை கொல்ல திட்டம் போடுகிறாள். ( பின்குறிப்பு ஹிப்னாடிசம் என்பது தேர்தல் வாக்குறுதி போல. திரும்ப திரும்ப சொல்லும்போது மனதில் அப்படியே படிந்து விடும். அப்படியே நம்பி விடுவோம்) ஏறக்குறைய அந்த திட்டம் நிறைவேறும்போது, கமாண்டர் ப்ரேசில் அதனை தடுத்து எதிரிகளை முறியடிப்பதுதான் கதை.



முதலைப் படையின் கதைகளில் ஆக்ஷன் காட்சிகள்தான் பிரதானம். அவற்றை ஒவியர் சிறப்பான முறையில் வடிவமைத்திருப்பதே இத்தொடர்களின் வெற்றிக்கு காரணம்.

Thursday, September 3, 2009

கொலைகார கானகம்


கடலோரம் அமைந்த காட்டினால் சூழப்பட்ட தீவு ஒன்றில் தீடீரென காட்டுத் தீ ஏற்படுகிறது. தீயை அணைக்க முடியாதபடி காற்று பலமாக வீசி தீயை மேலும் வேகமாக பரவசெய்கிறது. தீவில் உள்ள மக்கள் தீவின் நடுவில் சிக்கிக் கொள்ள அவர்களை மீட்பதற்காக அருகிலுள்ள அனைத்து கப்பல்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

தகவலறிந்து வந்தடையும் சிறு கப்பல்களால் கூட தீவை நெருங்க முடியாத அளவு கடலெங்கும் ஊசி போன்ற பாறைகள் அரணாக அமைந்துள்ளது. மீறி செல்வோருக்கு கப்பலும், உயிரும் மீஞ்சாத நிலைமை. காப்பீடு நிறுவனங்களும் கைவிரித்து விட்ட சூழ்நிலையில், பிரின்ஸ் குழுவினரின் கழுகு கப்பலும், மேலும் இரு கப்பல்களும் துணிச்சலாக தீவு மக்களை மீட்பதற்காக செல்கின்றன.


தீவில் உள்ள தகவல் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் உபயோகமற்ற நிலையில் தீவு மக்களுக்கு உதவி வந்து கொண்டிருப்பதை தெரிவித்து, அவர்களை ஒன்று திரட்டுவதற்காக காட்டுத் தீக்குள் நுழைந்து செல்ல தயாராகிறார் கேப்டன் பிரின்ஸ்.


பல ஆபத்துகளை எதிர்நோக்கி செல்லும் பிரின்ஸ் தீவு மக்களிடம் பத்திரமாக சென்றடைந்தாரா? பார்னே தலைமையில் சென்ற மூன்று கப்பல்களும் விபத்தில் சிக்காமல் தீவிலிலுள்ள மக்களை மீட்டனரா? என்பதை இக்கதையின் முடிவு.



ஒரு பிரின்ஸ் கதைக்குரிய அனைத்து தகுதிகளும் இக்கதைக்கும் உண்டு.


பின்குறிப்பு 1

மூல சித்திரங்களில் ஒரு கரடி காட்டுத் தீயில் சிக்கி தன்னுடைய குட்டியை காப்பாற்ற கேப்டன் பிரின்ஸை தாக்க முயற்சிக்கும். வேறு வழியில்லாமல் அதை கொல்லும் பிரின்ஸ் அநாதையான கரடிக்குட்டியை தன்னுடன் அழைத்து செல்வார். பிரின்ஸ் குழுவில் கரடிக்குட்டி இணைந்த கதை இதுதான். திகில் காமிக்ஸில் வந்த சித்திரங்களில் எடிட்டர் இதனை கதையின் சுவை கெடாதவாறு வெட்டியிருப்பார். கேப்டன் பிரின்ஸ் ஒரு ஆதரவற்ற விலங்கினை கொல்வது அவரின் இரசிகர்களான நம்மிடைய ஒரு சலனத்தை உருவாக்கும் என.

பின்குறிப்பு 2

சில தவிர்க்க முடியாத காரணங்களால் படங்களை முன்னதாகவும் பதிவினை சிறிது காலதாமதமாகவும் போட வேண்டியுள்ளது. அதை பொருட்படுத்தாது தொடர்ந்து வருகைபுரியும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பின்குறிப்பு 3

என் பெயருக்கேற்ற வகையில் ப்ரூனோ ப்ரேசில் கதைகளையும் விமர்சனம் செய்ய உள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Thursday, August 13, 2009

பனிமண்டலக் கோட்டை - பனியில் ஒரு சாகசம்




கேப்டன் பிரின்ஸ்-ன் எதிரியான வாங்-ஓ-வின் அழகிய மகளை மூக் மாஞ்ச் என்ற இன்னொரு பிரபல கடத்தல்காரன் கடத்தி ஒரு கோடி ரூபாய் பெறுமானமுள்ள வைரங்களை கேட்கிறான். பேரத்திற்கு உடன்படும் வாங்-ஓ தன் மகளை மீட்டு வர தன்னுடன் இருப்பவர்களை நம்பாமல் தன்னுடைய பரம வைரியான பிரின்ஸ்-ன் உதவியை நாடுகிறான். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பிரின்ஸ்-ம் அவனுக்கு உதவி செய்வதை தவிர வேறுவழியில்லை என்ற நிலையில் சம்மதிக்கிறான். வைரத்துடன் புறப்படும் பிரின்ஸ் மற்றும் பார்னே செங்குத்தான மலைகள், குறுகலான பாதைகள், கந்தகம் நிறைந்த பிரதேசங்கள், வழிப்பறி திருடர்களின் அபாயங்கள், மனித இரத்தத்தை ருசி பார்க்கும் ராட்சத வவ்வால்கள் என பல ஆபத்துகளை கடந்து மூக் மாஞ்சுவிடம் வைரங்களை ஒப்படைத்து வாங்-ஓவின் மகளை மீட்டார்களா என்பதுதான் கதை.

வித்தியாசமான கதை சூழல். பிரமிப்பான ஒவியங்கள். கடைசியில் மிரள வைக்கம் சஸ்பென்ஸ். ஓவியர் மற்றும் கதாசிரியர் ஹெர்மான் மற்றும் க்ரேக்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த சித்திரப் புதையலை நமது லயன் மற்றும் முத்து வாசகர்களில் ஒருவரான திரு ராகுலன் என்பவர் பிரெனஞ் (மூலம்) மொழியில், பெரிய அளவில், முழு வண்ணத்தில் படித்தவர். நம்மைப் போல் அனைத்து தமிழ் காமிக்ஸ் வாசகர்களும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவருடைய சுய முயற்சியால் பெரிய அளவில் முழு வண்ணத்தில் அயல்நாட்டு தரத்துடன் ஸ்டார் காமிக்ஸ் என்ற பெயரில் மிகச் சிறப்பான முறையில் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

அவருக்கு இக்கதையை பற்றி எழுதும் தருணத்தில் என் மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.