Tuesday, December 14, 2010

வேதாளர் என்றழைக்கப்படும் மாயாவி


வேதாளர் 1936-ம் ஆண்டில் உலகப்போருக்கிடையில், மோசமான பொருளாதார சூழ்நிலையில், லீ ஃபாக்-என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு கதாநாயகன். ஆப்பிரிக்க கானகத்தில் உள்ள பெங்காலியா எனும் இடத்தில் வசிக்கும் பழங்குடி மக்களையும் வன விலங்குகளையும் பலதலைமுறைகளாக காத்து வரும் பாதுகாவலர்.

1600-களில் கடற்கொள்ளையரால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்து பெங்காலியா காட்டில் ஒதுங்கிய கிறிஸ்டோபர் வாக்கர், பின்னர் கடற்கொள்ளையருக்கு எதிராக முதல் வேதாளராக மாறியவர். அவர் சந்ததியினரும் அவரை போலவே தீமைகளை எதிர்த்து போராட உறுதிமொழி எடுத்தவர்கள். தற்போதைய வேதாளர் செந்தாடி என்பவனை தலைமையையாய் கொண்டு இயங்கி வரும் கடற்கொள்ளையரை அடக்கி அவர்களை கொண்டே கடலோர காவற் படையை அமைத்தவர்.
அடர்ந்த கானகத்தில் மண்டை ஓடு குகையில் வசித்து வரும் தற்போதைய வேதாளர் 21-ம் தலைமுறையை சார்ந்தவர். அவரது பெயர் கிட் வாக்கர், மனைவி டயானா பால்மர் ஐ நா சபையில் பணிபுரிபவர்.

வேதாளருடைய வலது கையிலிருக்கும் கபால முத்திரை மோதிரம் எதிரிகளின் தாடைகளுக்கு நீங்காத நினைவுச் சின்னத்தை பதிக்கும். இவருடைய குதிரை ஹீரோ ஓநாய் டெவில் இரண்டும் அவருடைய நிழல்கள். இரண்டு கைத்துப்பாக்கிகள் அடங்கிய பெல்ட். வேதாளரின் கதைக்களனில் வரும் ஈடனின் தோட்டம் மிகச் சிறப்பான ஒரு கற்பனை. ஆனால் அது சாகசங்களின் தன்மையை ஈர்த்து போக செய்கிறதாக கதாசிரியர் உணர்ந்த போது அத்தோட்டம் சார்ந்த களன் ஒரம் கட்டப்பட்டது.உலகம் முழுவதும் உள்ள பல காமிக்ஸ் சூப்பர் ஹீரோக்களுக்கு மத்தியில் இன்றும் இவருக்கென்று அளவிட முடியாத வாசகர்கள் இருந்து கொண்டு இருக்கின்றார்கள். நாளேடுகளில் இன்றும் இவரின் சாகசங்கள் 25-க்கும் மேற்பட்ட மொழிகளில் சித்திரத் தொடர்களாக வெளியாகின்றன. உதாரணத்திற்கு த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். நாவலாகவும், திரைப்படங்களாகவும், தொலைக்காட்சி தொடர்களாகவும் வேதாளர் அறியப்பட்டுள்ளார். ஆனால் திரையுலகம் இதுவரை வேதாளரை சரிவர காட்சிப்படுத்தவில்லை.


தமிழில் வேதாளருடைய சாகசங்கள் இந்திரஜால் காமிக்ஸ் (தமிழ் மொழிபெயர்ப்பு வேதாளர் குத்து கும்மாங்குத்து என்றிருந்தாலும், கலரில் மிகக்குறைந்த விலையில் வந்ததொரு காமிக்ஸ்), ராணி காமிக்ஸ் (குறைந்த விலையில், சுமாரான மொழிபெயர்ப்பில் மாயாவி என்றழைக்கப்பட்டார்), வித்யார்த்தி மித்ரம் காமிக்ஸ் (சில கதைகளே வெளிவந்தது), குமுதம் பத்திரிக்கையில் (1970-களில்) தொடராகவும் வெளிவந்தாலும், பெரும் புகழ் ஈட்டி தந்தது முத்து காமிக்ஸில் மட்டுமே.ஒரு ரூபாய் விலையில் வந்த 1.முகமூடி வேதாளன், 2. விண்வெளி வீரன் எங்கே? 3. விசித்திர கடற்கொள்ளையர், 3. இராட்சத விலங்கு, 4. மூகமுடி கள்வர்கள், 5. கப்பல் கொள்ளையர், 6. பூ விலங்கு, 7. சர்வாதிகாரி, 8. கானக கள்வர்கள், 9. ஜும்போ, 10. வேதாளனின் சொர்க்கம், 11. கீழ்த்திசை சூனியம்,
12 .சூனியக்காரியின் சாம்ராஜ்யம், 13. கூண்டில் தொங்கிய சர்வாதிகாரி, 14. முத்திரை மோதிரம்  போன்ற சித்திரக் கதைகள் தமிழில் வெளிவந்த வேதாளரின் சித்திரக் கதைகளில் மொழிபெயர்ப்பு மற்றும் தரத்தில் மிகவும் சிறந்த கதைகள் என அறியப்படுகிறது.


Tuesday, November 2, 2010

இரத்தப்படலம் - ஜம்போ ஸ்பெஷல் -


கதாசிரியர் வான் ஹோம், ஓவியர் வில்லியம் வான்ஸ் இருவர் உருவாக்கிய இரத்தப்படலம் 1984-ம் வருடத்தில் ப்ரென்ஞ் மொழியில் முழு வண்ணத்தில் (ஹும்!) வெளிவந்தது. இதன் தொடர்ச்சி கடந்த 23 ஆண்டுகளாக 19 புத்தகங்களாக வெளிவந்து 2007-ம் வருடத்துடன் கதைத்தொடர் முடிவடைந்துள்ளது.

வித்தியாசமான கதையமைப்பும், பிரமிக்க வைக்கும் ஒவியங்களும் இத்தொடர் வெற்றியடைய முக்கிய காரணங்கள். ப்ரென்ஞ் மொழியில் பெரும் வரவேற்பை பெற்ற இத்தொடரை திரு எஸ் விஜயன் அவர்கள் முதன் முதலாக தமிழில் 1986-வருடம் திகில் காமிக்ஸில் (அட்டகாசமான காமிக்ஸ், ஏன் நிறுத்திட்டிங்க, சார்?) அறிமுகப்படுத்தினார். (இதன் ருசிகர பின்னணி இத்தொகுப்பிலே கொடுக்கப்பட்டுள்ளது).

கடந்த 24 வருடங்களில் 10 புத்தகங்களை மட்டும் வெளியிட்டுவிட்டு 2010-ல் 1 முதல் 18 பாகங்கள் வரை ஒரே புத்தகமாக வெளியிட்டு இச்சித்திரத் தொடரை நிறைவு செய்துள்ளார். பிரன்ஞ் மொழியில் சாதனை செய்தது போல தமிழிலும் இரத்தப்படலம் சாதனை படைக்க முதலைப்பட்டாளம் சார்பாக வாழ்த்துக்கள்!

ப்ரென்ஞ் மொழியில் வெளிவந்த ஆல்பங்களின் அட்டைப்படங்கள் சில உங்களின் பார்வைக்குபின் குறிப்பு ப்ரென்ஞ் மொழியில் 19 புத்தகங்களாக வெளிவந்த இச்சித்திரத் தொடரை தமிழில் 18 புத்தகங்களை மட்டுமே முழுத் தொகுப்பில் எடிட்டர் வெளியிட்டுள்ளார். 13-ம் பாகமாக வந்த The XIII Mystery (குற்றம் நடந்தது என்ன?) என்ற பாகத்தை ஒரு புலன்விசாரணை என்ற தலைப்பில் தனியாக வெளியிடவிருக்கிறார்.

பாகங்கள் 18 மற்றும் 19-ம் ஆல்பங்கள் ஒரே நேரத்தில் வெளிவரவேண்டி இருந்ததால் 18-ம் பாகத்திற்கு கேப்டன் டைகர் புகழ் க்ரௌட் சித்திரங்களை வரைந்துள்ளார்.


 1. The Day of The Black Sun, 1984 (Le jour du soleil noir) கருப்பு சூரியனின் நாள்
 2. Where the Indian Goes, 1985 (Là où va l'Indien) செவ்விந்தியன் போகுமிடம்
 3. All the Tears of Hell, 1986 (Toutes les Larmes de l'Enfer) பூலோக நரகம்
 4. SPADS, 1987 (SPADS) அதிரடி படை
 5. Red Alert, 1988 (Rouge Total, "Full Red Alert") சிகப்பு எச்சரிக்கை
 6. The Jason Fly File, 1989 (Le Dossier Jason Fly) ஜேஸன் ப்ளையின் நினைவலைகள்
 7. The Night of 3rd August, 1990 (La Nuit du 3 Août)
 8. Thirteen Against One, 1991 (Treize Contre Un)
 9. For Maria, 1992 (Pour Maria)
 10. El Cascador, 1994 (El Cascador)
 11. Three Silver Watches, 1995 (Trois Montres d'Argent)
 12. The Verdict, 1997 (Le Jugement)
 13. The XIII Mystery: The Inquiry, 1999 (L'Enquête)
 14. Danger to the State, 2000 (Secret Défense, "Top Secret")
 15. Unleash the Dogs!, 2002 (Lâchez les Chiens !)
 16. Operation Montechristo, 2004 (Opération Montechristo)
 17. Maximilian's Gold, 2005 (L'or de Maximilien)
 18. The Irish Version (La Version Irlandaise),2007
 19. The Last Round, November 2007 (Le Dernier Round).
இச்சித்திரத் தொடர் முடிவடைந்த போதிலும், இதில் பங்கேற்ற முக்கிய பாத்திரங்களை மையமாக வைத்து மேலும் சில ஆல்பங்கள் வெளிவந்தன. அதில் மங்கூஸ் - கொலைகாரன் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

Wednesday, October 13, 2010

இரத்தத் தீவு (அ) ஏழு ஈய சிலுவைகள்1900-ல் சீனாவில் நடந்த ஆட்சி மாறல் கலவரத்தின்போது அரண்மனையில் உள்ள விலையுயர்ந்த வைரங்கள் (அட்றா சக்கை!) ஒரு சீன சிப்பாயால் கொள்ளையடிக்கப்படுகிறது. கலவரம் முடிந்தபின் கொள்ளை போன வைரங்களை கண்டுபிடிக்க முயல்கிறது சீன அரசாங்கம். (எங்கேய்யா கதாநாயகன்)

சீனாவிலிருந்து ஏழு பாதிரியார்கள் நியூகினி தீவுகளில் வசிக்கும் பப்பூஸ் என்கிற காட்டுவாசிகளை மனம் திருப்ப செல்கின்றார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் அச்சிப்பாய் கொள்ளையடித்த வைரங்களை ஏழு ஈயச் சிலுவைகளுக்குள் மறைத்து அவர்களிடம் கொடுத்து விடுகிறான். பப்பூஸ் இனத்தவர் தீவிற்கு சென்ற பாதிரியார்களை கடவுள் அளித்த உணவு என நினைத்து அதன்படி நடந்துக் கொள்கின்றார்கள்.

நூறாண்டுகளுக்கு பிறகு ஜேக் என்ற நபருக்கு புதையல் இருக்கும் இடம் தற்செயலாக தெரியவருகிறது. தன்னால் மட்டும் புதையலை அடைய முடியாது என்பதால் கேப்டன் சொல்டான் என்பவனின் உதவியை நாடுகிறான். பேராசை குணம் படைத்த சொல்டானோ புதையல் ரகசியத்தை தெரிந்துக் கொண்டு அதை முழுவதையும் தானே அடைய பார்க்கிறேன். (அதுதானே நியாயம்!)

இதற்கிடையே சொல்டானின் அள்ளக்கை மூலமாக இந்த இரகசியத்தை ஒரு சீன கொள்ளைக்காரி லீ பின் ஸிங் தானும் களத்தில் இறங்குகிறாள். டொட்டடாய்ங்! நம் கதாநாயகர்கள் ரோஜர் மற்றும் பில் இதில் எதிர்பாராதவிதமாக மாட்டிக் கொண்டு, இரு கும்பல்களையும் சமாளித்து, பப்பூஸ் இனத்தாரை கடந்து சென்று தீவில் உள்ள சிலுவைகளை மீட்டார்களா என்பதுதான் கதை.

ஆயிரத்தில் ஒருவனை நினைவுபடுத்தினாலும், அதைவிட சிறப்பான சித்திரக்கதை இது. இந்த கதைக்கு சித்திரம் வரைந்தவர் வில்லியம் வான்ஸ் (இந்த பேர கேட்டாலே தமிழ் சித்திரக்கதை நேயர்கள் விசிலடிப்பார்கள்) கதாசிரியர் ஹென்றி வெர்ன்.

சில தேர்ந்தெடுத்த சித்திரங்களை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.

Wednesday, March 17, 2010

புரட்சித் தலைவன் பிரின்ஸ்க்ரனாடா தீவின் செல்வந்தரான பிரான்ஜென் பணபலம், படைபலம் என அனைத்தையும் கொண்ட ஒரு சர்வாதிகாரியாக திகழ்கிறான். அங்கு வசிக்கும் ஏழை விவசாயிகளின் நிலங்களை தன்னுடைய ஏற்றுமதி தொழிலுக்காக சொற்ப விலை கொடுத்து பறித்துக் கொள்கிறான்.பிரான்ஜென்னால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் எமிலியோ என்ற நபரின் தலைமையில் புரட்சிப் படை ஒன்றை உருவாக்கி அவனை எதிர்கின்றார்கள். புரட்சிப் படை தலைவன் எமிலியோவை தந்திரமாக சிறை பிடிக்கிறான் ப்ரான்ஜென்.

இந்த சூழ்நிலையில் கழுகு கப்பல் பழுதடைந்த காரணத்தினால் க்ரனாடா தீவிற்கு வந்து சேரும் பிரின்ஸ் குழுவினர் எதிர்பாராத விதமாக புரட்சிப் படை முகாமிற்கு வந்து சேர்கின்றார்கள்.ப்ரான்ஜென்னுக்கு எதிராக போராடும் அவர்களின் உண்மைநிலையை கண்டு புரட்சிப் படைக்கு தலைமை ஏற்று எதிரிகளோடு மோதுகிறார் பிரின்ஸ்.

பிரின்ஸின் சாதுர்யத்தால் எதிரிகளின் படைகளையும் ப்ரான்ஜென்னின் சூழ்ச்சியையும் முறியடித்து அவனிடம் இழந்த அனைத்து மக்களின் நிலங்களையும் இறுதியில் மீட்டு தருவதே கதை.பிரின்ஸ் கதைகளில் சற்று மாறுபட்ட விதத்தில் கௌபாய் பாணியில் இந்த சித்திரக் கதையை உருவாக்கி இருக்கின்றார்கள் கதாசிரியர் க்ரேக் மற்றும் ஒவியர் ஹெர்மான்.