Monday, September 21, 2009

முகமற்ற கண்கள்


வில்லியம் வான்ஸின் சித்திரங்களில் க்ரெக் (லுயி அல்பர் என்ற புனைப்பெயரில்)அவரின் கதையுடன் 1970-களில் வெளிவந்த ஒரு சித்திரத் தொடர் முதலைப்படை.

தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்க அரசாங்கத்தின் கீழ் செயல்படும் ஒரு இரகசிய பிரிவின் அதிரடி படை: முதலைப் படை. இந்த படையின் தலைவர் கலோனல் எல் (காமெடி கர்னல் இல்லீங்க!). கமாண்டர் ப்ரூனோ ப்ரேசில்.

படையின் உறுப்பினர்கள் பற்றி சிறிய அறிமுகம்.

ப்ரூனோ ப்ரேசில் கமாண்டர். மின்னல் வேக செயல்திறன் கொண்டவர் (என்னை போலவே)

கௌச்சோ மோரல்ஸ் முன்னாள் ரௌடி. சிறைச்சாலையின் வெளிப்புறம் மட்டுமின்றி உள்புறமும் நல்ல பழக்கம் அண்ணாச்சிக்கு.

விப் ரபேல் (அல்லது) ஜுடி சாட்டையடி வீராங்கனை. சர்க்கஸில் காட்டு மிருகங்களை சாட்டையை வைத்து பயமுறுத்திக் கொண்டிருந்தவர் இப்போது நாட்டு மிருகங்களை பயமுறுத்திக் கொண்டிருப்பவர்.

டெக்ஸாஸ் அண்ணாச்சி ஒரு கௌபாய். டமால் டூமில் பேர்வழி.

பில்லி ப்ரேசில் இவரும் அதிரடி படை காரர். கமாண்டர் ப்ரூனோவின் தம்பி.

நாடோடி ஆள் பார்க்க ஜிப்சி அடிச்சா எதிரிகள் கப்சிப்.

இந்த சித்திர தொடர்கள் வரிசையில் மூன்றாவதாக வெளிவந்த கதையே முகமற்ற கண்கள். திகில் காமிக்ஸில் பாக்கெட் சைஸில் வெளிவந்த புத்தகம். கதைக்கு வருவோம்.


முதலைப்படையின் பரம எதிரிகளில் ஒருவரான மேடம் சொர்ணா அக்கா (ச்சும்மா தமாசுக்கு) முதலைப் படை உறுப்பினர்களில் ஒருவரான விப் ரபேலை கடத்தி ஹிப்னாட்டிஸம் மூலம் அவளை ப்ரூனோ ப்ரேசிலை கொல்ல திட்டம் போடுகிறாள். ( பின்குறிப்பு ஹிப்னாடிசம் என்பது தேர்தல் வாக்குறுதி போல. திரும்ப திரும்ப சொல்லும்போது மனதில் அப்படியே படிந்து விடும். அப்படியே நம்பி விடுவோம்) ஏறக்குறைய அந்த திட்டம் நிறைவேறும்போது, கமாண்டர் ப்ரேசில் அதனை தடுத்து எதிரிகளை முறியடிப்பதுதான் கதை.முதலைப் படையின் கதைகளில் ஆக்ஷன் காட்சிகள்தான் பிரதானம். அவற்றை ஒவியர் சிறப்பான முறையில் வடிவமைத்திருப்பதே இத்தொடர்களின் வெற்றிக்கு காரணம்.

Thursday, September 3, 2009

கொலைகார கானகம்


கடலோரம் அமைந்த காட்டினால் சூழப்பட்ட தீவு ஒன்றில் தீடீரென காட்டுத் தீ ஏற்படுகிறது. தீயை அணைக்க முடியாதபடி காற்று பலமாக வீசி தீயை மேலும் வேகமாக பரவசெய்கிறது. தீவில் உள்ள மக்கள் தீவின் நடுவில் சிக்கிக் கொள்ள அவர்களை மீட்பதற்காக அருகிலுள்ள அனைத்து கப்பல்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

தகவலறிந்து வந்தடையும் சிறு கப்பல்களால் கூட தீவை நெருங்க முடியாத அளவு கடலெங்கும் ஊசி போன்ற பாறைகள் அரணாக அமைந்துள்ளது. மீறி செல்வோருக்கு கப்பலும், உயிரும் மீஞ்சாத நிலைமை. காப்பீடு நிறுவனங்களும் கைவிரித்து விட்ட சூழ்நிலையில், பிரின்ஸ் குழுவினரின் கழுகு கப்பலும், மேலும் இரு கப்பல்களும் துணிச்சலாக தீவு மக்களை மீட்பதற்காக செல்கின்றன.


தீவில் உள்ள தகவல் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் உபயோகமற்ற நிலையில் தீவு மக்களுக்கு உதவி வந்து கொண்டிருப்பதை தெரிவித்து, அவர்களை ஒன்று திரட்டுவதற்காக காட்டுத் தீக்குள் நுழைந்து செல்ல தயாராகிறார் கேப்டன் பிரின்ஸ்.


பல ஆபத்துகளை எதிர்நோக்கி செல்லும் பிரின்ஸ் தீவு மக்களிடம் பத்திரமாக சென்றடைந்தாரா? பார்னே தலைமையில் சென்ற மூன்று கப்பல்களும் விபத்தில் சிக்காமல் தீவிலிலுள்ள மக்களை மீட்டனரா? என்பதை இக்கதையின் முடிவு.ஒரு பிரின்ஸ் கதைக்குரிய அனைத்து தகுதிகளும் இக்கதைக்கும் உண்டு.


பின்குறிப்பு 1

மூல சித்திரங்களில் ஒரு கரடி காட்டுத் தீயில் சிக்கி தன்னுடைய குட்டியை காப்பாற்ற கேப்டன் பிரின்ஸை தாக்க முயற்சிக்கும். வேறு வழியில்லாமல் அதை கொல்லும் பிரின்ஸ் அநாதையான கரடிக்குட்டியை தன்னுடன் அழைத்து செல்வார். பிரின்ஸ் குழுவில் கரடிக்குட்டி இணைந்த கதை இதுதான். திகில் காமிக்ஸில் வந்த சித்திரங்களில் எடிட்டர் இதனை கதையின் சுவை கெடாதவாறு வெட்டியிருப்பார். கேப்டன் பிரின்ஸ் ஒரு ஆதரவற்ற விலங்கினை கொல்வது அவரின் இரசிகர்களான நம்மிடைய ஒரு சலனத்தை உருவாக்கும் என.

பின்குறிப்பு 2

சில தவிர்க்க முடியாத காரணங்களால் படங்களை முன்னதாகவும் பதிவினை சிறிது காலதாமதமாகவும் போட வேண்டியுள்ளது. அதை பொருட்படுத்தாது தொடர்ந்து வருகைபுரியும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பின்குறிப்பு 3

என் பெயருக்கேற்ற வகையில் ப்ரூனோ ப்ரேசில் கதைகளையும் விமர்சனம் செய்ய உள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.