கேப்டன் பிரின்ஸ் (தெரிந்ததும், தெரியாததும்)

கேட்கும் தொலைவில் கடல் இருந்தும் கடல் பயணியாக நானில்லை. இதனாலேயோ கழுகு கப்பலில் ( cormoran - நீர்க்காகம் ) புவி சுற்றும் ஒரு முரட்டு பிடிவாத கேப்டனின் சாகசங்கள் என் மனதை மிகவும் கவர்ந்து விட்டன. முதன் முதலில் கருப்பு வெள்ளை என இரு வண்ணங்களில் தான் நான் அவரை அறிந்தேன். அவ்விரு வண்ண சித்திரங்களில் உள்ள சாகசங்கள் என் மனதில் அப்போது பல நிறங்களில் நிரவி கிடந்தது. நான் போகாத இடங்களுக்கு கழுகு என்னை அழைத்து சென்றது போலிருந்தது. எரிமலை, நச்சரவங்கள் சூழ்ந்த சதுப்பு நிலக்காடு, உடல் உறைய வைக்கும் பனி, எரிய வைக்கும் பாலைவனம், உறைய போகும் கடலில் நேரத்துடனான பந்தயம், உயிரை குடிக்கும் முட்புதர்கள் என எத்தனை இடங்கள். மூளை மழுங்க வைக்கும் வகுப்பறைகளிலும், உறவினர் வெறுப்பேற்றும் குடும்ப நிகழ்ச்சிகளிலும் முகத்தில் புன்னகையுடன் கழுகு கப்பலின் குழுவினரில் ஒருவனாக பயணித்தது போன்ற அனுபவத்தை இச்சிரத்திரக்கதைகள் மூலமாக உணரச் செய்தது. பொதுவாக புத்தகங்கள் எல்லாம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக மட்டும் இருக்கும் . ஆனால் பிரின்ஸ் கதைகளில் சமூக உணர்வு...